25 June 2019

#செல்லங்கள்


செல்லங்கள்!


பி2 போலீஸ் ஸ்டேஷன் பரபரவென்று இருந்தது.
வழக்கம்போல் ஸ்டேஷன் வாசலில் இருந்த கம்பத்தில் இருந்து மாலைநேரத்து தேசிய கொடியிறக்க நிகழ்ச்சிக்காக போலீசார் தயாராகிக் கொண்டிருந்தனர்.
போலீசார் அனைவரும் கொடிக்கம்பத்தின் முன்பு நிற்க, அவர்களுக்கு தலைமை வகிக்கும் வகையில் எஸ்ஐ ஞானப்பிரகாசம் நின்றார்.
‘‘நேஷனல் பிளாக் சல்யூட்’’ என்று குரல் கொடுத்துவிட்டு, காவலர் ஒருவர் சிறிய பேண்ட் வாத்தியத்தில், கொடியிறக்க  இசையை  ஊதினார்.
அனைத்து காவலர்களும் கொடியை பார்த்தபடி சல்யூட் அடித்து நிற்க போலீஸ்்காரர் ஒருவர் கொடிக்கம்பத்தில் இருந்து, தேசியக் கொடியை இறக்கினார்.
ஸ்டேஷன் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குப்பத்து சிறுவர்கள், பேண்ட் வாத்திய இசையைக் கேட்டதும், சல்யூட் அடித்து நின்றனர்.
கொடியிறக்கப்பட்டதும், போலீசார் அனைவரும் அவரவர் நிலைக்கு வந்தனர்.
‘‘யோவ் நாளைக்கு சுதந்திரம் காலையில 7 மணிக்கு எல்லாம் கொடி ஏத்திடணும்னு இன்ஸ்பெக்டர் சொல்லியிருக்கார். எல்லா சாமானையும் வாங்கி வச்சிட்டீங்க இல்லே?’’ என்று கான்ஸ்டபிள்களை பார்த்து கேட்டார் எஸ்ஐ ஞானப்பிரகாசம்.
‘‘ஆமாங்கய்யா… சட்டையில குத்திக்கிற கொடிக்கட்டு 2, புதுக்கயிறு எல்லாம் வாங்கியாச்சுங்கய்யா… புதுக்கொடி ஏத்தினா…கஞ்சி போட்டிருக்கிறதால சரி்யா விரிஞ்சு நிற்காது… அதனால பழகுறதுக்காக இன்னைக்கே புதுக்கொடியை கம்பத்தில ஏத்தி வச்சிருந்தோம். இதோ… அதை நல்லா மடிச்சு வச்சிடுறேன்யா’’ என்றார் ஏட்டு மூத்தவரான ராமலிங்கம்.
‘‘சரி… எல்லோரும் நாளைக்கு காலையில சீக்கிரம் அசம்பிள் ஆயிடுங்க… எந்த காரணத்தையும் சொல்லிட்டு லேட்டா வரக்கூடாது… அப்புறம் இன்ஸ்பெக்டர் என்னைப்பிடிச்சு திட்டிட்டு இருப்பாரு… சரியா…?’’ என்று கூறியவாறு ஸ்டேஷன் உள்ளே நடந்தார் ஞானப்பிரகாசம்.
‘‘யோவ் சுந்தரம் கொடிய பத்திரமா மடிச்சு… கப்போர்டில வச்சிடு…. பூக்காரம்மா இன்னைக்கே உதிரிப்பூ குடுத்திட்டு போயிடிச்சு… அதை தண்ணி தெளிச்சு… அதையும் கப்போர்டில  வச்சிடு…’’ என்று உத்தரவிட்டு, ராமலிங்கம் தொப்பியை கழற்றியவாறு உள்ளே சென்றார்.
வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்தபடி கொடியை பத்திரமாக மடக்கி, ஸ்டேஷனுக்கு வலப்புறம் ஜன்னலுக்கு அருகில் வெளியில் இருந்த கப்போர்டில் வைத்தார் சுந்தரம். அருகில் இருந்த பானையில் இருந்து தண்ணீரை எடுத்து பூ கவரில்  தண்ணீரை தெளித்து, அதையும் உள்ளே வைத்தார். ஒருமுறை எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டு, பின்பு கப்போர்ட்டை  சாத்தினார்.
அதிகாலை 5 மணி.
எங்கோ நாய் ஒன்று ஊளையிடும் சத்தம் மெலிதாக கேட்டது. கீழ்வானம் கிழவி துப்பிப்போட்ட வெத்திலைப்பாக்கு போன்று விடியலின் அறிகுறியாக சிவப்பாக காணப்பட்டது.
ஸ்டேஷனில் வாசலில் பாரா போலீஸ்காரர் தூங்கி வழிந்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது எழுவதும், மீண்டும் மெதுவாக கண் அசத்தினால் தூங்குவதுமாக இருந்தார்.
‘‘டேய் பிளானை ஒரு முறை சரிபார்த்துக்கலாம் வாங்கடா’’ என்றான் மணி.
எல்லோரும் கிரிக்கெட் வீரர்களை போன்று தோள்மேல் கைகளை போட்டுக் கொண்டு குனிந்து 5 சிறுவர்களும் ஆலோசித்தனர்.
‘‘டேய் விஷ்ணு, மதி, அன்பு நான் சொன்னது புரிஞ்சது இல்ல?’’ கேட்டான் மணி.
‘‘ஸ்டேஷனுக்கு பின்னாடி தானே கம்பத்தை போட்டு வச்சிருக்கீங்க?’’ மணி இன்னொரு முறை கேட்டான்.
‘‘ஆமாண்டா நேத்து ராத்திரியே நானும் அன்பும் கொண்டு வந்து ஸ்டேஷனுக்கு பின்னாடி போட்டுட்டோம்’’ என்றான் பரத்.
‘‘சரி… பிளான்ல இறங்கலாமா?’’ கேட்டான் மணி.
மூன்று பேரும் சேர்ந்து கட்டை விரலை  உயர்த்திக் காண்பித்தார்கள்.
பின்னர்,  நால்வரும் ஸ்டேஷனை நோக்கி வந்தார்கள்.
ஸ்டேஷன் காம்பவுண்டு வாசலில் பாரா போலீஸ்காரர் அரைத்தூக்கத்தில் இருந்தார்.
அருகில் ஆள்அரவம் கேட்கவே எழுந்து பார்த்தார். குப்பத்து சிறுவர்கள் செல்வதைப் பார்த்து மீண்டும், அமைதியானார்.
அவர் எழுந்ததை பார்த்ததும், காலை நேரத்தில் ஸ்டேஷனுக்கு பின்புறம் இருக்கும் காட்டுப்பகுதிக்கு காலைக்கடன் கழிக்க செல்வதைப்போல் தேமே என்று நடந்து சென்றனர் சிறுவர்கள்.
போகும்போதே ஸ்டேஷனில் நோட்டம் விட்டனர். யாரும் விழித்திருப்பது போல் தெரியவில்லை. ஸ்டேஷனில் மட்டும் ஒரு டியூப்லைட் இப்போது உயிரை விடுமா, அப்புறம் விடுமா என்பதுப்போல், இருபுறமும் கருத்தும் எரிந்து கொண்டிருந்தது.
ஸ்டேஷன் பின்புறத்தில் வந்ததும் நால்வரும் அக்கம்பக்கம் பார்த்தனர்.
அந்த நேரத்தில் யாரும், அந்தப்பக்கம் நடமாடுவதாக தெரியவில்லை.
ஸ்டேஷனுக்கு  பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில்தான் முன்பு குப்பத்து மக்கள் எல்லாம் காலைக்கடனுக்கு சென்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால், போலீசாரின் கெடுபிடியால் பெரியவர்கள் அந்தப்பக்கம் வருவதை தவிர்த்துவிட்டார்கள். ஆனால், இன்னமும் சிறுவர்கள் மட்டும் இந்தப்பக்கம் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். அதனால்தான் சிறுவர்கள் சென்றதை பார்த்தும் போலீஸ்காரர் ஒன்றும் சொல்லவில்லை.
மணியும், பரத்தும் சேர்ந்து ஸ்டேஷனில் காம்பவுண்டு சுவரை ஒட்டிக்கிடந்த நீண்ட கம்பம் ஒன்றை எடுத்து, காம்பவுண்டு சுவரில் சாய்த்தனர். அதற்கு மற்ற இருவரும் உதவினார்கள்.
‘‘ஓகே’’ என்று மணி கைக்காட்ட, கம்பத்தை நடுவில் ஒருவனும்,  கீழ் பகுதியில் இரண்டு பேரும் பிடித்துக் கொண்டனர்.
மணி மடமடவென்று கம்பத்தில் ஏறி காம்பவுண்டு சுவரின் மீது வந்தான். அங்கிருந்து மீண்டும் கைக்காட்ட, கீழே நின்றிருந்த இருவரும் கம்பத்தை மேலே தூக்கி, ஸ்டேஷனுக்கு உள்புறம் தள்ளினார்கள். ஒரு நிலைக்கு வந்ததும், கம்பம் கீழே வேகமாக சரிவதை, மணி மேலே நின்றவாறு பிடித்து இறக்கினான்.
கம்பம் சரியாக ஸ்டேஷனின் உள்புறம் சாய்ந்து நின்றது. அதன்வழியாக  உள்ளே இறங்கினான் மணி.
காம்பவுண்டு சுவற்றின் இந்தப்பக்கம் யாரும் வருகிறார்களா என்று நோட்டமிட்டபடி பார்த்துக் கொண்டிருந்தனர் மதி, பரத், அன்பு.
சரியாக  பத்தாவது நிமிடத்தில், ‘மியாவ்’ என்று ஒரு சத்தம் கேட்டது.
அதைத்தொடர்ந்து ஸ்டேஷனின் அந்தப்பக்கத்தில் இருந்து பிளாஸ்டிக் கவர் ஒன்று பறந்து வந்து விழுந்தது. அதை சரியாக கேட்ச் பிடித்தான் அன்பு.
அடுத்த  சில விநாடிகளில் காம்பவுண்டு சுவற்றின் மீது தோன்றினான் மணி. மீண்டும் நண்பர்களிடம் கட்டை விரலை காண்பித்துவிட்டு, உள்ளிருந்த கம்பத்தை இழுத்து வெளியே விட்டான். அது தரையில் படாதவாறு பிடித்து இறக்கினர் மற்ற மூவரும். பின்பு அதே கம்பத்தின் வழியாக சறுக்கியபடி இறக்கி வந்தான் மணி.
அன்பு அந்த பிளாஸ்டிக் கவரை தன் டவுரிசரின் பெல்ட் போட்டுக் கொள்ளும் பட்டையில் கட்டிக் கொண்டான்.
அப்போதுதான் மணியின் கையைப் பார்த்தான் பரத்.
மணியின் கையில் கம்பத்தின் கூரான பகுதிகள் குத்திக்கிழித்ததில் ரத்தம் வடிந்துக் கொண்டிருந்தது. ‘‘டேய்… என்னடா ரத்தம் வருது?’’ என்றான் பரத்.
‘‘விடுடா… வீரனுக்கு இதெல்லாம் சகஜம்’’ என்று வசனம் பேசினான் மணி.
‘‘கம்பத்தை மறுபடியும் எடுத்திட்டு போயிடுவோம்… இல்லாட்டி மோப்ப நாய்க்கிட்ட மாட்டிடுவோம்’’ என்றான் மணி.
‘‘சரி’’ என்று கூறியவாறு, பின்புறம் முன்புறம் இரண்டு பேர், பின்புறம் இரண்டு பேர் என்று அந்த கம்பத்தை தூக்கிக் கொண்டு, ஸ்டேஷனை சுற்றிக் கொண்டு குப்பத்துக்கு செல்ல ஆரம்பித்தார்கள். ஸ்டேஷன் முன்புறத்தை தாண்டும்போது, கம்பத்தின் முன்னால் இருந்த மணியும், பரத்தும் எட்டி பாரா போலீஸ்காரரை பார்த்தனர். அவர் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
மணி ஆறாகியிருந்தது.
பறவைகள் எல்லாம் இரைதேடி அங்கும், இங்கும் பறந்துக் கொண்டிருந்தன.
எஸ்ஐ ஞானப்பிரகாசம் புல்லட்டில் வந்து இறங்கினார்.
ஏற்கனவே முகம் கழுவி நின்றிருந்த பாரா போலீஸ்காரர் விரைப்பாக ஒரு சல்யூட் அடித்தார்.
சல்யூட் அடித்தபடி விறுவிறுவென்று ஞானப்பிரகாசம் உள்ளே சென்றார்.
சீட்டில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்த நேரத்தில்தான் பதற்றமாக வந்தார் ஏட்டு ராமலிங்கம்.
‘‘என்னய்யா? ஏன் இவ்வளவு பதற்றமா வர்றே?’’ கேட்டார் ஞானப்பிரகாசம்.
‘‘ஐயா… ஒரு தப்பு நடந்துப்போச்சு… ஸ்டேஷனுக்கு வெளியே கப்போர்டில வச்சிருந்த தேசியக்கொடி, பூ, கயிறு, எதையும் காணோம்ங்கய்யா…’’ என்றார் மூச்சிரைக்க.
‘‘என்னய்யா… சொல்லுறே… கொடியப்போய் யாருய்யா தூக்கிட்டுப் போகப்போறா….’’ ஞானப்பிரகாசமும் அதிர்ச்சியுடன் கேட்டார்.
‘‘அதுதானுங்கய்யா எனக்கும் குழப்பமா இருக்கு…. பாரா கிட்ட கேட்டுட்டேன்… யாருமே உள்ளே வரலன்னு சொல்றான். அப்புறம் எப்படி இது நடந்ததுன்னுதான் தெரியலிங்கய்யா…’’ என்றார் ஏட்டு.
இருவரும் வெளியே வந்து பார்த்தனர். கப்போர்ட்டில் இருந்த கொடி பொருட்கள் எதையும் காணவில்லை.
வாசலில் நின்றிருந்த பாராவை கூப்பிட்டார் ஞானப்பிரகாசம். ‘‘யோவ்… நல்லா யோசிச்சு…  சொல்லுய்யா… யாராவது உள்ளே வந்தாங்களா… இல்லே உள்ளே நடந்தது எதுவும் தெரியாமா நீ  தூங்கிட்டியா?’’
‘‘ஐயா… ராத்திரிப்பூரா தூங்காமா கண் விழிச்சுட்டுதாங்கய்யா இருந்தேன்… எனக்கு தெரிஞ்சு யாருமே உள்ளே வரலங்கய்யா…’’ என்றார் பாரா போலீஸ்காரர்.
‘‘என்னய்யா இது ஆச்சரியமா இருக்கு… எமனுக்கு தெரியாமா உயிர் போயிருக்கு…’’ என்றார் ஞானப்பிரகாசம்.
‘‘இன்ஸ்பெக்டர் வேற 7 மணிக்கு வந்துடுவாரேய்யா… இப்ப போய் இப்படி  ஆயிடிச்சே…’’ ஞானப்பிரகாசம் முணுமுணுத்தார்.
அவரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த பாரா போலீஸ்காரர் திடீரென மூளையில் மின்னலடித்தவராக, ‘‘சார்… அதிகாலையில ஒரு அஞ்சு மணியிருக்கும்னு நினைக்கிறேன் சார்… ரொம்ப நாளைக்கு அப்புறமா அந்த குப்பத்து பசங்க பின்பக்கத்துக்கு போனாங்க… ஒருவேளை அவங்க எடுத்திட்டு போயிருப்பாங்களோ?’’ என்றார்.
‘‘வாய்யா பின்னாடி போய் பார்க்கலாம்’’ என்று ஞானப்பிரகாசம் பின்பகுதிக்கு விரைந்தார்.
அங்கு காம்பவுண்டு சுவற்றின் மீது கம்பத்தினால் விழுந்த கீறல்கள் புத்தம் புதிதாக தெரிந்தது.
‘‘ஆமாய்யா… யாரோ சுவர் ஏறிக் குதிச்சுத்தான் ஆட்டைய போட்டுட்டு போயிருக்காங்க…’’ என்றார் ஞானப்பிரகாசம்.
‘‘ஐயா… அப்போ அந்த குப்பத்து பசங்களாத்தான் இருக்கும்கய்யா… வாங்க நாம உடனே  அங்கேப்போனா… நம்ம ஸ்டேஷன் வாசல்ல விளையாடிட்டு இருப்பாங்களே… அதுல ஒருத்தனோட வீடு எனக்கு தெரியும். அவன்கிட்டபோய் கேட்டா தெரிஞ்சுடும்… அவங்களை பிடிச்சுடலாம்…’’ என்றார் ராமலிங்கம்.
அடுத்தவிநாடி புல்லட்டில் ஏறி ஞானப்பிரகாசமும், ராமலிங்கமும் விரைந்தனர். பின்னாலேயே மேலும் இரண்டு கான்ஸ்டபிள்கள் பைக்கில் விரைந்தனர்.
குப்பத்துக்கு உள்ளே செல்ல முடியாது என்பதால் பைக்கை நிறுத்திவிட்டு, உள்ளே நடந்தார்கள். என்றுமில்லாமல் போலீஸ்காரர்கள் குப்பத்தில் வந்திருந்ததை பார்த்த  ஜனங்கள் மிரண்டுப்போய் சல்யூட் அடித்தபடி ஒதுங்கி சென்று கொண்டிருந்தார்கள்.
சரியாக அன்புவின் வீட்டுக்கு அவர்கள் வரவும், உள்ளே இருந்து அன்பு வெளியே வரவும் சரியாக இருந்தது.
போலீசாரை பார்த்ததும் அன்பு ஓட்டம் எடுத்தான்.
அதைப்பார்த்ததும் போலீசாரும் அவரை துரத்த ஆரம்பித்தனர்.
‘‘டேய்… நில்லுடா…  ஓடாதே… ’’ என்று ஞானப்பிரகாசமும், ராமலிங்கமும் அவனை துரத்தினார்கள்.
சந்து பொந்துகளில் நுழைந்து ஓடிய அவனை விடாமல் துரத்தினர் போலீசார்.
கடைசியில் அவன் வந்து சேர்ந்த இடம், குப்பத்தின் நடுப்பகுதியில் இருந்த அரசமரம். அங்கு திடீரென கீழே கிடந்த மண்ணை எடுத்து போலீசாரின் முகத்தில் விசிறியடித்தான் அன்பு.
அதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார், கண்ணில் விழுந்த மண்ணால் முழியை கசிக்கிக்கொண்டு நின்றுவிட்டனர்.
அவர்கள் ஒருவழியாக கண்ணை துடைத்துக் கொண்டு பார்வைத்திறனை பெற்றபோது, திடீரென ‘ஜன கன மன…’’ என்று தேசியகீதம் கேட்டது. அவர்கள் தங்கள் எதிரே கண்டக்காட்சி, சாதாரண கம்பம் ஒன்றில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு, அங்கிருந்த அனைவரும் தேசியக்கீதத்தை பாடிக் கொண்டிருந்தனர்.
ரத்தம் வடியும் கையுடன் மணியும், அவனது நண்பர்கள் பரத், மதி மற்றும் ஓடிவந்த அன்பு ஆகியோர் தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்தபடி நின்றிருந்தார்கள்.
ஸ்டேஷனில் வாங்கி வைத்திருந்த அனைத்து தேசியக்கொடி அட்டைகளும் அங்கிருந்தவர்கள் சட்டைகளில் காணப்பட்டது.
போலீசார் விரைப்பாக தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்தார்கள்.
தேசியகீதம் முடிந்ததும், சிறுவர்கள் நால்வரும் போலீசாரிடம் வந்தனர்.
‘‘சார்… உங்க ஸ்டேஷன்ல எத்தனையோ தடவை கொடி ஏத்துறதை பார்த்திருக்கிறோம். ஆனா… ஒருவாட்டிக்கூட எங்க குப்பத்தில தேசியக்கொடி ஏத்தினதில்ல சார்… அதனாலத்தான் ஸ்டேஷன்ல இருந்து கொடியும் மத்த எல்லாத்தையும் எடுத்திட்டு வந்து இங்க கொடி ஏத்தினோம் சார்’’ என்றான் மணி.
அவனை வாரி அணைத்துக் கொண்டார் ஞானப்பிரகாசம். அதேபோல் ராமலிங்கமும் மற்றவர்களை கட்டியணைத்தார்.
-          ஜே.எஸ்.கே.பாலகுமார்.



No comments:

Post a Comment

Thanks